கஹவத்தை – அந்தான பகுதியில், பொலிஸார் போல நடித்து வந்த ஒரு கும்பல் இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று, அவர்களில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில் இந்தக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹவத்தை , புங்கிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திங்கட்கிழமை (30) இரண்டு சகோதரர்களை ஒரு கும்பல் கடத்திச் சென்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த பொலிஸார்,
அந்த நேரத்தில், வீட்டிற்குள் நுழைந்த ஒருவர்,
“ஓடாதே. நாங்கள் இரத்தினபுரி பொலிஸ் நிலைய அதிகாரிகள். அங்கேயே இருங்கள்” என்று கூறியுள்ளார்.
அந்த நேரத்தில், இரண்டு சகோதரர்களில் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் ஒளிந்துள்ளார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு நபர், இரு இளைஞர்களையும் கைகளில் விலங்கிட்டு, ஒரு ஜீப்பில் ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கஹவத்தை, அந்தான, கொஸ்கெல்ல பகுதியில் உள்ள சன நடமாற்றமற்ற இடத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்று தரையில் மண்டியிட வைத்துள்ளனர்.
இரண்டு இளைஞர்களும் கூச்சலிட்டபோது, கடத்தல் கும்பலில் ஒருவர் தரையில் துப்பாக்கி சூடு மேற்கொண்ட போது, மேலும் ஒரு துப்பாக்கி குண்டு இளைஞர்களில் ஒருவரின் காலில் சுடப்பட்டுள்ளது.
பின்னர், “இவர்கள் பொலிஸ் இல்லை, அவர்கள் எங்களை கொல்லப் போகிறார்கள்” என்று மற்றைய இளைஞர் கூச்சலிட்டபோது, அந்தக் குழுவினர் அவரது கழுத்தில் சுட்டுவிட்டு ஜீப் வண்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த இளைஞரின் அலறல் சத்தத்தினால், அப்பகுதி மக்கள் வந்து கைவிலங்குகளை உடைத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும் கழுத்தில் சுடப்பட்ட 22 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சகோதரர்கள் இருவருக்கும் ஒருவருடன் சண்டை ஏற்பட்டுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரரியவந்துள்ளது.
அத்தோடு, இரு சகோதரர்களும் குறித்த நபரின் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த நபர் துபாயில் பதுங்கியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான அமித்தின் உறவினர் ஆவார், அதன்படி, போதைப்பொருள் கடத்தல் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

