பிரதேச சபை உறுப்பினர்களை சிறைப்பிடித்து மத்துகமை பிரதேச சபை கைப்பற்றினார்கள்

81 0

பிரதேச சபை உறுப்பினர்களை வீட்டினுள் சிறைப்பிடித்து  அடாவடித்தனமாக எதிர்க்கட்சியினர் மத்துகமை பிரதேச சபை அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக  சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு எதிர்க்கட்சியினரின்  இந்த வெற்றி தற்காலிகமானதெனவும், பிரதேசசபை உறுப்பினர்களை தடுத்து வைத்து அரசியல் அபிலாசையை பூர்த்தி செய்துக் கொண்டவர்கள் விரைவில் அதற்கு பதிலளித்தாக வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்துகம பிரதேச சபை தலைவர் தெரிவு குறித்து திங்கட்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

களுத்துறை மாவட்டத்தின் 12 பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் வாக்குகள் மூலம் தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாக தமது தீர்மானங்களை முன்வைக்க உரிமையுண்டு.

எனினும் பிரதேச சபை அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல்  8 மணி வரை ஒரு சில பிரதேச சபை உறுப்பினர்களை வீட்டினுள் சிறைப்பிடித்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

அதற்கு காரணமான அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிரதேச சபை உறுப்பினர்களை சிறைப்பிடித்து , அவர்களின் சுதந்திரத்தை முடக்கி ,உறவுகளிடையேயான தொடர்பை துண்டித்து அடாவடியாக மத்துகம பிரதேச சபை அதிகாரத்தை எதிர்க் கட்சியினர் கைப்பற்றியுள்ளனர்.

இது மத்துகம பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.  இது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

பொதுமக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். இது அவர்களின் தற்காலிக வெற்றி மாத்திரமே. வெகு விரைவில் இந்த தீவிரவாதத்திடமிருந்து மத்துகம நகரை மீட்க வேண்டும்.

அரசாங்கம் என்ற ரீதியில் மத்துகம  நகரை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தனி நபரின் பணத்தைக் கொண்டு பிரதேச சபைகளை அபிவிருத்தி செய்ய முடியாது.

பொதுமக்களின் தீர்வை வரி, அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி மற்றும் தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்படும் நிதியைக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறாயினும் பிரதேச சபை உறுப்பினர்களை தடுத்து வைத்து அரசியல் அபிலாசையை பூர்த்தி செய்துகொண்டவர்கள் அதற்கு பதிலளித்தாக வேண்டும் என்றார்.