தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காமையும் எமது வெற்றியே – திஸ்ஸ அத்தநாயக்க

76 0

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் 80க்கும் அதிக சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்துள்ளது. ஆனால் 67 சபைகளில் மாத்திரமே அரசாங்கத்துக்கு தனித்து ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. இது எமக்கு கிடைத்த வெற்றியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் 80க்கும் அதிக சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்துள்ளது.

ஆனால், 67 சபைகளில் மாத்திரமே தேசிய மக்கள் சக்திக்கு தனித்து ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. ஒருபுறம் இதுவும் எமக்கு கிடைத்த வெற்றியாகும். ஒத்தி வைக்கப்பட்டுள்ள சபைகள் பலவற்றிலும் அடுத்த வாரம் நாம் ஆட்சி அமைக்கவுள்ளோம் என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 219க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி தனித்தும், ஏனைய கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் ஆதரவுடனும் ஆட்சி அமைத்துள்ளது.

அவற்றில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 63 சபைகளும் அடங்குகிறது. வடக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 20 சபைகளில் ஆட்சி அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.