ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை முற்றுமுழுதாக அரசாங்கம் அதன் தேவைக்காக முன்னெடுத்துள்ள ஒரு நடவடிக்கையாகும். குறித்த நபர் மீதான நம்பிக்கைக்கு அப்பால் அவர் நியமிக்கப்பட்டுள்ள முறைமை அவர் எடுக்கும் ஏதேனுமொரு நடவடிக்கை மீது சந்தேகத்தையே ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்களை மீறி அதிகாரத்துக்காக மாத்திரமே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்னர் மக்களின் வாழ்வாதாரம், ஊழல், மோசடிகள் தொடர்பில் பெரிதாகப் பேசினர். பொருளாதாரத்தை மிகக் குறுகிய காலத்துக்குள் கட்டியெழுப்புவதாகவும் கூறினர். ஆனால், 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், எந்தவொரு வாக்குறுதியையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
உள்நாட்டு விவகாரம் ஒரு புறமிருக்க சர்வதேச மோதல் நிலைமைகள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் அக்கரையின்றி செயற்பட்டு வருகிறது. அவற்றால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கும் எந்தவொரு தெளிவான கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை. அரசியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக்கொண்டிருக்காமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
ஷானி அபேசேகர என்பவர் குறிப்பிட்ட காலத்தில் மிகவும் சிறப்பாக சேவையாற்றிய அதிகாரி ஆவார். எனவே, அவரது பணிகள் தொடர்பில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஆனால், அவரது நியமனத்தை அரசியல் நியமனமாக இந்த அரசாங்கம் மாற்றியுள்ளது. முதலாவது காரணி அவர் ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். அது மாத்திரமின்றி தேர்தல் காலத்தில் அவர் தேசிய மக்கள் சக்தியின் பிரசார மேடைகளில் ஏறியிருக்கிறார்.
எனவே, அவரால் எடுக்கப்படும் ஏதேனுமொரு நடவடிக்கை பொது மக்களால் சந்தேகத்துடனேயே பார்க்கப்படும். குறித்த நபர் மீதான நம்பிக்கையின்மை என்பதற்கு அப்பால், அவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முறைமையே கேள்விக்குரியதாகக் காணப்படுகிறது. எனவே இதுபோன்ற விடயங்களில் அரசாங்கம் இன்னும் ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

