வேலணை பிரதேச சபையின் கன்னி அமர்வு தவிசாளர் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்றது.
முன்னதாக வேலணை பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலத்தின் மக்கள் பிரதிநிதிகள் வங்களாவடி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளை தொடர்ந்து பிரதேச சபையின் உத்தியோகத்தர்களால் உறுப்பினர்களுக்கு மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு சபைக்கு அழைத்து வரப்பட்டனர்.
வேலணை பிரதேச சபையின் செயலாளருடன் ஆரம்பமான முதலாவது சபை அமர்வில் உரையாற்றிய தவிசாளர்,
எமது வேலணை பிரதேச சபையானது மிகப் பின்தங்கிய ஒரு சபையாக இருக்கிறது.
அந்த நிலை இனியும் தொடரக்கூடாது என்பதே எமது அனைவரது நிலையாக இருக்கிறது. அதன் அடிப்படையில் எமது சபையை வருமானம் கூடிய சபையாக வினைத்திறன் மிக்கதாக பரிணமிக்கச் செய்வது அவசியமாகும்.
அதேபோன்று கடந்த சபையில் நாட்டின் காலத்தில் காலச்சூழலால் பொருளாதார நெருக்கடி போன்ற ஏதுக்களால் பல திட்டங்கள் தடைப்பட்டுப் போயின.
அதன் அடிப்படையில் கடந்த காலத்தில் முன்னெடுக்காமல் இருந்த திட்டங்களை நாம் கட்சி பேதங்கள் இன்றி முன்னெடுப்பது அவசியம்.
அதேபோன்று ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கு பேதமின்றி ஆதரவுகள் இருக்க வேண்டும்.
அத்துடன் வங்களாவடி கடைத் தொகுதியின் மேற்றளத்தை கட்டுதல், பொது விளையாட்டு மைதானம் அமைத்தல், அதை சிறந்த பொதிமுறையுடன் முன்னெடுத்துச் செல்லல், சோலைவருவாய் திட்டத்தை வேலணையின் அனைத்து கிராமங்களிலும் முன்னெடுத்தல், சுற்றுலா விவசாய நடவடிக்கைகளை விரிவாக்கல், வீதிச் சுற்றுவட்டம் அமைத்தல், முக்கியஸ்தர்களின் நினைவுச் சிலைகள் அமைத்தல், வேலணை நுழைவாயில் வளைவு அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து நிறைவுசெய்துகொள்ள இந்த ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கையுடன் முயற்சிக்கின்றேன் என்றார்.
அதன் பின்னர் உறுப்பினர்களது அறிமுக உரை இடம்பெற்றன. தொடர்ந்து நியதிக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

