கிராமங்கள், பெருந்தோட்ட மக்களிடையே வாய், கழுத்து புற்றுநோய் அதிகரிப்பு

67 0
image

இந்நாட்டில் பல தசாப்தக் காலமாக பொது சுகாதாரப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும்,  குறிப்பாக கிராமங்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களிடையே  வாய் மற்றும் கழுத்து புற்றுநோய் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) 92வது வருடாந்திர அறிவியல் அமர்வு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் சமீபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலங்கையில் சுமார் 3,500 பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாளானோர் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர்.

தனியார் துறையில் மாத்திரம் சுமார் 300-400 பேர் பணிபுரிகின்றனர். 70-80 பேர் பல்கலைக்கழக அமைப்பிலும் 50-60 பேர் ஆயுதப்படைகளிலும் பணிபுரிகின்றனர்.

தொற்றா நோய்களின் அதிகரிப்பால்  இந்நாட்டின்  சுகாதாரத் துறை சிக்கலான பொது சுகாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வாய்வழி நோய்கள் உலகளவில் மிகவும் தீவிரமாக அதிகரித்து வரும்  தொற்றா நோய்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்நாட்டில் பல தசாப்த காலமாக பொது சுகாதாரப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும்,  குறிப்பாக கிராமங்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களிடையே  வாய் மற்றும் கழுத்து புற்றுநோய் அதிகரித்துள்ளது.

புகையிலை பயன்பாடு, வெற்றிலைப் பாக்கு மெல்லும் பழக்கம் மற்றும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில் காணப்படும் பலவீனம் ஆகியன காரணமாக  புற்றுநோய்  போன்ற ஆபத்து காரணிகள்  அம்மக்களிடையே பரவலாக உள்ளன.

பல் மற்றும் வாய் வழி நோய்களை முன்கூட்டியே கண்டறியாமை மற்றும் உரிய  சிகிச்சைகளைப் பெறாமை உள்ளிட்ட ஒரு சில காரணிகள் அம்மக்களின் வாய் சுகாதாரத்தை பேணுவதற்கு தடைகளாக உள்ளன.

வாய்வழி சுகாதாரம் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பின் அடிப்படை அங்கமாக மறுவரையறை செய்யப்பட வேண்டும்.

உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவோமாயின் வாய்வழிப் புற்றுநோய் உள்ளிட்ட வாய் சார்ந்த பல நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

வருமானம் மற்றும் தம் வாழும் பகுதியை பொருட்படுத்தாமல், ஒவ்வொருவரும் உரிய வாய் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.