அவர்கள் இல்லை… ஆனால் நம் உள்ளத்தில் வாழ்கிறார்கள்!

115 0

அவர்கள் இல்லை இன்று நிலத்தில்,
ஆனால் எங்கள் நெஞ்சில் நிழலாய் வாழ்கின்றார்கள்!
அழித்துவிட்டோம் என்ற அவ்வழி சக்திகளுக்கு,
அழிக்க முடியுமா எங்கள் உயிரினுள் பதிந்த உணர்வை?

தங்கள் இளமைக்கால கனவுகளைத் துறந்து,
தங்களைத் தங்கள் தேசத்திற்கு அர்பணித்தவர்கள்!
தங்கள் வாழ்நாளைத் தமிழரின் எதிர்காலத்திற்காக
தியாகமாக்கிய வீரர்களின் வீர நினைவுகள்
நம் நெஞ்சில் எரியும் தீயாக எழுகின்றன!

நீதி வேண்டி எழுந்த நெருப்புக் கொழுந்துகள்,
மண்ணில் கருகிய பிணங்களாய் உருண்டாலும்,
மனத்தில் மலர்ந்த விடியல் கனவுகள் —
அவர்கள் தந்த விலைமதிப்பற்ற பரிசுகள்!

அவர்கள் முகத்தில் இருந்தது புன்னகை,
ஆனால் உள்ளத்தில் இருந்தது துக்கத்தின் ஓரம்;
அவர்கள் சிரித்தது தாயின் பேரில்,
அவர்கள் உயிர் தந்தது தமிழின் பேரில்!

அவர்கள் மரணம் ஒரு முடிவல்ல,
அது ஒரு விதை –
புதிய கிளைகள் முளைக்க
வேர்களாய் நம்முள் வாழும் நினைவுகள்!

அவர்கள் வழிகாட்டிய ஒளி நெறி,
இன்றும் எங்கள் சுவாசத்தில் தழல்கின்றது.
விடுதலை என்பது கனவென்றாலும்,
அவர்கள் வாழ்ந்தது அந்தக் கனவை நிஜமாக்க.

மாறலாம் காலங்கள்,
மாற்ற முடியாது தங்கள் நினைவுகள்.
அழிக்கலாம் உடல்களை,
அழிக்க முடியாது தங்கள் உறுதியை!

அவர்கள் வீரத்தை மறக்கவே முடியாது,
ஏனெனில் நாம் சுவாசிக்கிற ஒவ்வொரு நொடியிலும்
அவர்கள் உயிர்த்தெழுகின்றார்கள்!

□ ஈழத்து நிலவன் □
28/06/2025