நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (27) விபத்துக்குள்ளானதை தொடர்ந்து காணாமல்போன மற்றுமொரு மீனவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று வர்த்தக கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மீன்பிடி படகிலிருந்த ஐவர் காணாமல்போயிருந்தனர்.
காணாமல்போனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் இன்று சனிக்கிழமை (28) காலை உயிருடன் மீட்கப்பட்டதுடன் இரு மீனவர்கள் இன்று பிற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் காணாமல்போன மற்றுமொரு மீனவர் இன்று மாலை உயிருடன் மீட்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும் ஒரு மீனவர் காணாமல்போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தெற்கு பகுதியில் களுத்துறையிலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மீனவர்கள் இருவர் காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

