கொழும்பு டொக் யார்ட் நிறுவனத்தின் அதிக பங்குகளை தன்வசப்படுத்தும் இந்தியா

68 0

கொழும்பு டொக் யார்ட் நிறுவனத்தின் அதிக பங்குகள் மெசகோன் டொக் ஷிப் பில்டர்ஸ் என்ற இந்திய அரச நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்திய அரச நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்கான முதலீடு 53 மில்லியன் டொலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1974ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு டொக் யார்ட் நிறுவனமானது பிரதானமாக கப்பல் தயாரிப்பு, கப்பல் பழுதுபார்த்தல் உள்ளிட்ட முக்கிய சேவைகளின் ஈடுபட்டுள்ள இலங்கையின் பிரதான நிறுவனமாகும்.

ஜப்பானிடமிருந்த இந்த நிறுவனத்தின் அதிக பங்குகளை விற்பனை செய்வதற்கு அந்த முதலீட்டு நிறுவனம் தீர்மானித்திருந்தது.

அதற்கமைய அந்த பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு குறித்த இந்திய அரச நிறுவனம் தீர்மானித்துள்ளது. போர்க்கப்பல், பயணிகள் கப்பல், நீர் மூழ்கிக் கப்பல் மற்றும் சரக்கு கப்பல் தயாரிப்புகளின் மெசகோன் டொக் ஷிப் பில்டர்ஸ் முன்னணி நிறுவனமொன்றாகும்.

இந்நிறுவனத்தால் இதுவரையில் 800க்கும் அதிகமான கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள கொழும்பு டொக் யார்ட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இந்திய நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்துள்ளது. அதற்கமைய 6 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக குறித்த இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் கொழும்பு டொக்கி யார்ட் நிறுவனத்தின் அதிக பங்குகளை இந்திய நிழறுவனம் கொள்வனவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டது.

அந்தவகையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னிலை சோசலிச கட்சியின் புபுது ஜயக்கொட, கொழும்பு டொக்கி யார்ட் நிறுவனம் ஒரு அரச நிறுவனமாக பாரிய வருமானத்தைப் பெற்ற ஒரு நிறுவனமாகும்.

உலகில் சிறந்த கப்பல் நிறுவனம் என்ற பெயரையும் இந்நிறுவனம் தக்க வைத்துள்ளது. இதன் 51 சதவீத பங்குகள் ஒனி மிஷி என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. எனினும் இந்த நிறுவனம் வேறு நிறுவனத்துக்கு அதன் பங்குகளை விற்பதாயின் அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

130 மில்லியன் டொலர் பெறுமதியுடைய இந்த சொத்து 50 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிய முதலீடு என அரசாங்கம் கூறினாலும், மிகக் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் யாருக்கும் தெரியாமலேயே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது பூகோள அரசியலில் எமக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். தற்போது பங்குகளைப் பெற்றுள்ள குறித்த இந்திய அரச நிறுவனம் போர் கப்பல்களையும் தயாரிக்கின்றன.

இந்தியாவின் பூகோள அரசியல் தேவைக்காக முழு இலங்கையும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்காக நாம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இது தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு முற்றிலும் முரணானதாகும் என்றார்.