உலகுக்கு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி போதனை செய்யும் அமெரிக்கா இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு துணைபோகுகிறது.அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிபு அரசாங்கத்துக்கு கிடையாது. அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை மலினப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த கால அரசாங்கங்கள் இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்துள்ளன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் காரியாலயத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் திடீரென கொள்கலன் நெரிசல் ஏற்படுத்தப்பட்டது.இந்த நெரிசலுக்கு மத்தியில் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 200 கொள்கலன்களுடன் 323 கொள்கலன்கள் எவ்விதமான பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்டது.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் காணப்படுகின்ற நிலையில், அரசாங்கம் இதுவரையில் உண்மையை பகிரங்கப்படுத்தவில்லை.
கடந்த ஜனவரி மாதம் திட்டமிட்ட வகையில் கொள்கலன் நெரிசல் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் கொள்கலன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டது.
அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்காமல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சட்டவிரோதமான முறையில் 323 கொள்கலன்களை விடுவித்தார்.தற்போது இரண்டாவது தடவையாக கொள்கலன் நெரிசல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் சட்டவிரோதமான முறையில் கொள்கலன்கள் விடுவிக்கப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
இலங்கையின் நட்பு நாடாகவே ஈரான் உள்ளது. இலங்கையின் உள்ளக விவகாரங்களிலும்,இலங்கைக்கு எதிரான பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈரான் தலையிடவில்லை.சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆதரவாக ஈரான் செயற்பட்டுள்ளது.
உலகுக்கு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி போதனை செய்யும் அமெரிக்கா இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு துணைபோகுகிறது.அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிபு அரசாங்கத்துக்கு கிடையாது.அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை மலினப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

