மருந்து விநியோகத்தின் போது ஏற்படக் கூடிய தாமதங்களை தவிர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

101 0

வைத்தியசாலைகளுக்கான மருந்து விநியோகத்தின் போது ஏற்படக் கூடிய தாமதங்களை தவிர்த்துக் கொள்வதற்காக சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  புதன்கிழமை (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை விநியோகிப்பதற்கு 3 வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. விசேட வைத்திய நிபுணர்களால் அவர்களது நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளின் பட்டியல் தயாரிக்கப்படும்.

அந்த மருந்து பட்டியலுக்கமைய சுகாதார அமைச்சினால் இதுவரையில் மருந்து விநியோகப் பிரிவின் ஊடாக வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய 862 மருந்து வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றுடன் 12,444 சத்திர சிகிச்சை உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அதற்கான ஆலோசனைகள் விசேட வைத்திய நிபுணர்களிடமிருந்தே பெறப்படுகின்றன.

இவற்றில் 432 மருந்துகள் மற்றும் 5,906 சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கான விலைமனு கோரல் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஊடாகவே முன்னெடுக்கப்படும். எனவே இந்த மருந்துகளுக்கான விநியோகத்தின் போது சில சந்தர்ப்பங்களில் தடைகள் ஏற்படக் கூடும்.

வைத்தியசாலைகளுக்கான விநியோகத்தில் இவ்வாறு தாமதம் ஏற்படும் போது பிரதேச மட்டத்தில் அவற்றை கொள்வனவு செய்வதற்கான வழிமுறையும் காணப்படுகிறது. இரு நாட்களுக்குள் அதற்கான அனுமதியைப் பெற்று 5 நாட்களுக்குள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

இவ்வாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் 3,500 கோடி ரூபா உள்நாட்டு மருந்து கொள்வனவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மருந்து கொள்வனவில் ஏற்படக் கூடிய தாமதத்தைத் தவிர்த்துக் கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.