மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமைகளில் நாம் எந்த நாடுகளுக்கும் சார்பாக செயற்படவில்லை. அமைதிக்காகவே குரல் கொடுப்போம். உலகில் எந்தவொரு நாட்டிலும் யுத்த நிலைமை ஏற்படுவதை அங்கீகரிக்க முடியாது. இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கு மோதல் நிலைமை குறித்து அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட முன்னரே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அது தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றார்.
அமைச்சர்களுடன் இது தொடர்பில் கலந்தாலோசித்து எடுக்கப்பட வேண்டிய முன்னாயத்தங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கும், அமைச்சரவைக்கு அதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவது குறித்து அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை.
பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் போது, தேவையேற்படின் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
அத்தோடு இவ்விகாரம் தொடர்பில் விவாதிப்பதற்கு பாராளுமன்றத்திலும் நேரத்தை ஒதுக்க முடியும். கடந்த அமர்வில் அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், யோசனையை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வரத் தாமதமானதால் அந்த விவாத்தை நடத்த முடியாது போனது. எவ்வாறிருப்பினும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இந்த உப குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த பதற்ற நிலைமை தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் ஏற்கனவே எமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றோம்.
இஸ்ரேல் – ஈரானுக்கடையிலான மோதல் ஆரம்பிக்க முன்னரே காசாவில் மோதல் நிலைமை ஏற்பட்ட போதே, நாம் அமைதியை வலியுறுத்தி எமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தோம். உலகில் எந்தவொரு நாட்டிலும் யுத்த நிலைமை ஏற்படுவதை அங்கீகரிக்க முடியாது.
காரணம் எதுவாக இருந்தாலும், யுத்தம் ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படக் கூடியது சாதாரண பொது மக்களே. பொது மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படுவதோடு அப்பாவி மக்களே அநியாயமாக கொல்லப்படுவர்.
எனவே நாம் சிறியதொரு நாடாக இருந்தாலும், இந்த யுத்த நிலைமைகளை நிறைவுக்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
நாம் எந்த நாடுகளுக்கும் சார்பாக செயற்படவில்லை. அமைதிக்காகவே குரல் கொடுப்போம். இந்த மோதல் நிலைமை வலுசக்தி துறை, தேயிலை உள்ளிட்ட ஏற்றுமதித்துறை மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் என பல துறைகளிலும் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு ஏற்படும். இவை அந்நிய செலாவணி வருமானத்திலும் தாக்கம் செலுத்தக் கூடும்.
இவை மாத்திரமின்றி தற்போது உலகலாவிய ரீதியில் எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது. இவ்வனைத்துறைகளையும் உள்ளடக்கும் வகையிலேயே அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
சில துறைகளுக்கு மாற்றுவழியைத் தேட வேண்டியுள்ளது, ஏனைய துறைகளில் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றார்.

