நாட்டில் இடம்பெற்ற கடந்த தேர்தல்களில், கொழும்பில் தமிழ் பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது மாநகர சபை உறுப்பினர்களாகவோ தெரிவு செய்யப்படாமைக்கு முக்கிய காரணியாக பின்புலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான லயன் மனோகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த லயன் மனோகரன்,
இம்முறை இடம்பெற்ற கொழும்பு மாநகர சபைத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் பிரதிநிதிகள் வெல்லக்கூடிய இடங்களில் தமிழ் பிரதிநிதிகளை கொழும்பு மாநகர சபையில் போட்டியிட நிறுத்தவில்லை. இந்த செயற்பாடு வேட்பாளர்கள் மற்றும் மக்களிடத்தில் கடும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இருந்தபோது, தமிழ் மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் இடம்பெற்றன. அவ்வறிருக்கையில் மக்கள் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவுகளை வழங்கி வந்தனர். இம்முறை தேர்தலிலும் பெரும்பாலானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் தமிழர் என்ற ரீதியில் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தேசியப் பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் வாய்ப்பு வழங்கவில்லை.
கால காலமாக மக்களின் வாக்குகளை சூறையாடி, அதில் அரசியல் இலாபத்தை அனுபவித்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை கொழும்பு மாநகர சபையிலே தமிழர் ஒருவருக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள தலைமைகளின் போக்கே இதற்கு காரணம். பாராளுமன்றத் தேர்தலிலும் இதே நிலைமைதான் காணப்பட்டது. நாம் பலமுறை இது தொடர்பில் கேள்வியெழுப்பியும் எவ்வித பலனும் எமக்கு கிடைக்கவில்லை.
ஆகையால் எதிர்வரும் காலங்களில் கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதை, முற்றாக நிறுத்திக்கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பது மாத்திரமே இடம்பெறுகின்றது, ஆனால் தமிழர்களுக்கு எவ்வித நியமனங்களும் வழங்கப்படுவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் நியமனங்கள் மிகவும் முக்கியமானது, ஆகவே கொழும்பு வாழ் தமிழர்கள் அனைவரும் சிந்தித்து மாற்று திட்டமொன்றை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்.
அண்மையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் உள்ளூராட்சிசபைத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடவில்லை.இணைய வேண்டும் என்பது பலரின் ஆசையாக காணப்பட்டது. இணைந்திருந்தால் தேர்தல்களில் வெற்றிபெற்று அதிகாரங்களை கைப்பற்றியிருக்கலாம்.
அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியுற்று, இறுதியில் கொழும்பு மாநகர சபையில் முட்டுக்கொடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்தனர். இறுதியில் அதுவும் வெற்று வேட்டாகிவிட்டது. ஆகையால் எதிர்வரும் காலங்களில், கொழும்புவாழ் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களித்து எதிர்கால தமிழ் பிரதிநிதித்துவத்தை உருவாக்க முயற்சிப்போம் என்றார்.

