ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“தையிட்டி விகாரைப் பிரச்சினையை அரசியல் கண்ணோக்கில் பார்க்கக் கூடாது. பிரஜைகளுக்கும் விகாரைக்கும் இடையிலான பிரச்சினையாக மாத்திரம் பார்த்தால் தீர்வினை பெற்றுக்கொள்ளலாம். அகற்றினால் பிரச்சினை வரும்” என அண்மையில் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய ஆலோசனை குழு கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, அவரது அரசாங்கத்தின் நிலைப்பாடுமாக மட்டும் கணிக்க முடியாது. அதனை சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் என்று தமிழர்களை எச்சரிக்கும் தொனியாகவே நாம் கொள்ளலாம்.
அது மட்டுமல்ல அரச பயங்கரவாதம் சிங்கள பௌத்தத்தை கவசமாகக் கொண்டு தமிழர் தேசத்தில் முன்னெடுக்கும் சட்டவிரோத சமய ஆக்கிரமிப்புகளுக்கு திறந்த அனுமதி பத்திரமாகவே நாம் அடையாளப்படுத்த வேண்டும். இதுவா தேசிய மக்கள் சக்தியின் மாற்றத்தை நோக்கிய பயணம்? என இன நல்லிணக்கத்தையும் அரசியல் நீதியையும் விரும்பும் மக்கள் அமைப்புகள் தமது ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தல் வேண்டும்.
தையிட்டியில் அரசியல் நோக்கம் கொண்டு அரச பயங்கரவாத இராணுவத்தால் சட்ட விரோத விகாரையினை சிங்கள பௌத்த பேரினவாத அரசின் துணையோடு வெற்றி அடையாளமாகவே கட்டி எழுப்பப்பட்டுள்ள நிலையில், அரசியல் நோக்கில் பார்க்க வேண்டாம் எனக் கூறி ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது.
தற்போதைய ஜனாதிபதி நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தை விரும்பினால் முதலில் நாட்டின் நடைமுறை சட்டங்களை மீறி தமிழர்களின் சுமுக வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் நடந்து முடிந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
“விகாரைப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்” எனக் கூறும் ஜனாதிபதி சிங்கள பௌத்த அரசியலை மையப்படுத்தி அவ்விகாரை பிரதேசத்தில் வேறெந்த கட்டடங்களோ அல்லது சிங்கள குடியேற்றங்களோ உருவாக்க மாட்டோம் என உறுதி கூறாது தவிர்த்தது ஏன்? அப்பிரதேசத்தில் தமிழர்களின் வாழ்விற்கும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் எத்தனையும் செய்ய மாட்டோம் என உறுதி கூறாதது ஏன்? அதேபோன்று மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் இறக்குமதி செய்யப்படும் சிங்கள பௌத்தர்களை குறித்து வாய் திறக்காது ஏன்?
கடந்த கால நாட்டின் தலைவர்களைப் போலவே தற்போதைய ஜனாதிபதியும் பௌத்த விழாக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றில் பங்கேற்று சிங்கள பௌத்த மக்களை திருப்திப்படுத்தும் அரசியலை முன்வைத்து தமிழர்களை குற்றவாளிகளாக்கி அரசியல் கொலைக்கு உட்படுத்த முனைவது நாட்டின் எதிர்கால நலனையே பாதிக்கும்.
தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்படும் சமூக புதைகுழிகள் இனப்படுகொலைக்கு சாட்சியாக உள்ளதைப் போன்று சிங்கள பௌத்த தமிழின அழிப்புக்கு சாட்சியாக தையிட்டி விகாரை எழுந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் வருகையோடு இடம்பெறும் “அணையா விளக்கு” போராட்டம் இனப்படுகொலைக்கு எதிராக தமிழர் தேசம் என்றும் விரிவடைய வேண்டும். அதேபோன்று சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் பௌர்ணமி போராட்டமும் மக்கள் மயமாக வேண்டும். அதுவே தமிழர் தாயக அரசியலை நோக்கி மக்கள் மீள் எழ வழி சமைக்கும் எனலாம்.
அதிகார கதிரைகளுக்குள் அரசியலை தேடிக்கொண்டிருக்கும் சக்திகள் மக்கள் அரசியலை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல அணையா விளக்கு போராட்டமும், பௌர்ணமி போராட்டமும் விடுக்கும் அழைப்பை ஏற்காவிடின் அதற்கான தீர்ப்பை மக்கள் வழங்குவர் என குறிப்பிட்டுள்ளார்.

