ஒரே நாளில் தூய்மையானது முருக பக்தர்கள் மாநாடு நடந்த இடம்: மாநாட்டில் பங்கேற்றவர்களே ஒழுங்குபடுத்தி முன்னுதாரணம்

122 0

மதுரையில் நேற்று முன்தினம் பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு முடிந்ததும், மாநாட்டுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே ஒன்று திரண்டு தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை தாங்களே எடுத்து அடுக்கி வைத்ததோடு மாநாட்டு திடலையும் சுத்தம் செய்து, இதுபோன்ற மாநாடு, விழாக்களை நடத்துவோருக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பொதுவாக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நடத்தும் மாநாடுகள், கூட்டங்கள் முடிந்த பிறகு, மறுநாள் அந்த இடமே உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், குப்பைகள் நாலாபுறமும் சிதறி சுகாதாரச் சீர்கேடாகவும், குப்பைக் குவியலாகவும் காணப்படும். மாநாட்டில் போடப்பட்டிருந்த இருக்கைகள் தூக்கி வீசியெறியப்பட்டும், உடைந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கும்.இதற்கு விதிவிலக்காக, மதுரையில் நேற்று முன்தினம் பல லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் திரண்டு கந்த சஷ்டி பாடிய முருக பக்தர்கள் மாநாடு நடந்த இடம், மறுநாளே மிகத் தூய்மையாக ‘பளிச்’சென்று காணப்படுகிறது. மாநாடு நேற்று முன்தினம், 8.30 மணிக்கு தீபாராதனையுடன் முடிந்தநிலையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இந்து முன்னணியினர், முருக பக்தர்கள், வீட்டுக்கு உடனே புறப்பட்டுச் செல்லாமல் தன்னார்வமாக முன்வந்து, தாங்கள் அமர்ந்த இருக்கைகளை தாங்களே அடுக்கி ஒழுங்குபடுத்தி வைத்தனர்.