உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. இவ்வாறான நிலைமைகளால் இலங்கையில் பொருளாதார மந்த நிலைமை ஏற்படக் கூடிய அபாயமும் காணப்படுகிறது. எனவே பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும் என பொருளாதார ஆய்வாளர் தயநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது சுமார் நான்கரை பில்லியன் டொலர் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால், எமக்கும் இறக்குமதி செலவு அதிகரிக்கும். எனவே மாத இறுதியில் எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது.
அத்தோடு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே எமக்கு அதிகளவான அந்நிய செலாவணியும் கிடைக்கின்றது. 2024 முதல் காலாண்டில் இஸ்ரேலிலிருந்து 20 – 25 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது.
வருடத்துக்கு சுமார் 100 மில்லியன் டொலர் இஸ்ரேலிலிருந்து மாத்திரம் கிடைக்கப் பெறுகின்றது. இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிடைக்கும் அந்நிய செலாவணியில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்படக் கூடும்.
அமெரிக்காவின் தலையீட்டுடன் இந்த பூகோள மோதல் நிலைமைகளில் இலங்கையும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. இலங்கையின் ஏற்றுமதிகளில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.
அதனையடுத்து ஐரோப்பிய பிராந்தியம் மற்றும் சீனா என்பன காணப்படுகின்றன. எனவே தான் இந்த மோதல்கள் இலங்கையில் நேரடிய தாக்கத்தை செலுத்தும் எனக் குறிப்பிடுகின்றோம்.
ஈரானுக்கு பெருமளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுகிறது. இஸ்ரேலுக்கும் குறிப்பிட்டளவு உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, இறக்குமதிகளும் உள்ளன.
இவ்வாறு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.
எரிபொருள் விலை சமநிலைப்படுத்தப்படாவிட்டால் பின்நாட்களில் ஏனைய விளைவுகள் ஏற்படக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது. அத்தோடு இராஜதந்திர ரீதியிலும் திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக இவ்வாறான நிலைமைகளால் இலங்கையில் பொருளாதார மந்த நிலைமை ஏற்படக் கூடிய அபாயமும் காணப்படுகிறது. 2028இல் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் கூடும்.
எனவே பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். எவ்வாறிருப்பினும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இதற்கு பொறுத்தமான தீர்வாக அமையாது.
ஆனால் உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையில் எரிபொருள் விலை சமநிலைப்படுத்தப்பட்டால், இறக்குமதிகள் இயல்பாகவே மட்டுப்படும். விலைகள் உயர்வடையும் போது அவற்றின் பாவனைகளும் படிபடிப்படியாகக் குறைவடையும்.
எரிபொருள் விலை அதிகரிக்கும் பட்சத்தில் ஏனைய இறக்குமதிகளுக்கான செலவினையும், எரிபொருள் இறக்குமதியில் உள்ளடக்க வேண்டும்.
இவ்வாறான நிலைமையில் முறையான நிதி முகாமைத்துவம் இல்லாவிட்டால் அந்நிய செலாவணி இருப்பிலும் அது தாக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்புள்ளது. அதனை விடுத்து நேரடியாக இறக்குமதிகளால் அந்நிய செலாவணி இருப்பிற்கு பாதிப்பு ஏற்படாது.
காரணம் ஏற்றுமதி வருவாய், சுற்றுலாத்துறை வருவாய் உள்ளிட்ட சேவை ஏற்றுமதியூடாக கிடைக்கப் பெறும் டொலர்களே இறக்குமதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
ரூபாவின் பெறுமதியைப் பேணுவதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாறாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்றார்.

