மட்டக்களப்பு காத்தான்குடியில் கடந்த வியாழக்கிழமை (19.6.2025)நடைபெற்ற சம்பவமொன்று கிழக்கில் மீண்டும் மத அடிப்படைவாதம் தலை தூக்குகின்றதா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த வியாழக்கிழமை 15வயதே நிரம்பிய மாணவனும், மாணவியும் பிரத்தியேக வகுப்புக்கு சென்றுவிட்டு வந்து தமது வீட்டின் முற்றத்தில் இருந்து கதைத்துள்ளனர்.
இதன்போது அருகில் உள்ள வீட்டில் இருந்து வந்த மூவர் மாணவனை கடுமையாக தாக்கி இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி இவ்வாறு கதைக்கக்கூடாது என தெரிவித்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டுமெனத் தெரிவித்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி மூன்று முறை சிறை சென்று வந்தவர்.மற்றயவர்கள் மட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்தியவரின் உறவினர்கள் ஆவர்.
குறித்த மூவருமே மாணவர்கள் இருவரும் கதைப்பது இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு முரணானது என கெம்பி எழுந்தவர்களாவர்.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் நேற்று (20) மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை அத்தியட்கரிடம் முறையிட்டதை அடுத்து அவரின் அறிவுறுத்தலுக்கு அமைய காத்தான்குடி காவல்துறையில் பெற்றோரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு இன்றையதினம் (21) சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவன் மீதான தாக்குதலை அடுத்து காவல்துறையின் அறிவுறுத்தலுக்கமைவாக அவர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.

