ஈரான் கிளஸ்டர் குண்டு ஏவுகணையை பயன்படுத்துகின்றது -இஸ்ரேல்

63 0

ஈரான் கிளஸ்டர் குண்டு ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை ஈரான் ஏவிய ஏவுகணையிலிருந்து பல சிறிய குண்டுகள் வெளிவந்தன என தெரிவித்துள்ள இஸ்ரேல் பொதுமக்களை கொலை செய்யும் நோக்கத்துடன் ஈரான் இந்த ஆயுதத்தினை பயன்படுத்தியது என தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது கிளஸ்டர் வெடிபொருட்களை கொண்ட ஏவுகணையை செலுத்தியது என வோசிங்டனிற்கான இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.

கிளஸ்டர் ஆயுதங்கள் ஒருபெரிய பகுதியில் வெடித்து பரவி தீங்கை ஏற்படுத்தும் தாக்குதலிற்கான வாய்ப்பை கொண்டவை என இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரான் சட்டவிரோதமாக வேண்டுமென்று பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது இந்த வகை ஏவுகணையை செலுத்தியதன் மூலம் பரந்தளவிற்கு பரவும் வெடிபொருட்கள் மூலம் பொதுமக்களிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த முயல்கின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது குறித்த தகவலை பெற முயன்ற வேளை ஐநாவிற்கான ஈரான் தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

கிளஸ்டர் வெடிகுண்டுகளை ஈரான் பயன்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை இதுவே முதல்தடவை.

ஏவுகணையின் போர்முனை சுமார் 7 கி.மீ உயரத்தில் பிளந்து மத்திய இஸ்ரேலுக்கு மேலே சுமார் 8 கி.மீ சுற்றளவில் சுமார் 20 துணை வெடிபொருட்களை வெளியிட்டதாக இஸ்ரேலிய இராணுவத்தை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் மத்திய நகரமான அசோரில் உள்ள ஒரு வீட்டை சிறிய வெடிமருந்து ஒன்று தாக்கியதில் சில சேதங்கள் ஏற்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் இராணுவ நிருபர் இமானுவேல் ஃபேபியன் தெரிவித்தார். குண்டுவெடிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

கிளஸ்டர் குண்டுகள் சர்ச்சைக்குரியவைஏனெனில் அவை கண்மூடித்தனமாக பரந்துபட்ட பகுதிக்கு சிதறி பாதிப்பை ஏற்படுத்துகின்றன – அவற்றில் சில மோதல் முடிந்தபல வருடங்களின் பின்னரும் அழியாமலிருந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

வெடிக்காத வெடிபொருட்களின் ஆபத்துகள் குறித்த பொது எச்சரிக்கையாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு வரைபடத்தை வெளியிட்டது.

“பயங்கரவாத ஆட்சி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்கிறது மேலும் சேதத்தின் அளவை அதிகரிக்க பரந்த அளவில் ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது” என்று இஸ்ரேலின் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் தெரிவித்தார்.