தமிழகம் முழுவதும் கட்சி கொடிக் கம்பங்களை ஜூலை 2-க்குள் அகற்றாவிட்டால் ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

83 0

சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை என்பவர் விளாங்குடி உள்ளிட்ட 2 இடங்களில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களால் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், சில இடங்களில் உயிரிழப்புகள் நேரிடுவதாகவும் கூறி, ஏப். 28-ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றுமாறும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.மேலும் அந்த உத்தரவில், அரசியல் கட்சியினர், பிற அமைப்பினர் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் முறையான அனுமதி பெற்று, நிரந்தர கொடிக் கம்பங்களை வைத்துக் கொள்ளலாம் என்றும், தனியார் இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி ஆகியோர், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர். மேலும், பொது இடங்கள், சாலையோரங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கும்போது, கொடிகள் கீழே விழுந்து மற்றவர்களின் கால்களில் மிதிபடும் நிலை இருப்பதால், கட்சியினர் தங்களது அலுவலகங்களில் கொடியேற்றி, மதிப்புடன் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்திருந்தனர்.