16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்க ஏற்பாடு

79 0

16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரிசில்லா சமரவீர தெரிவிக்கையில்,

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையினால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்த  நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்  முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, 16 மாவட்டங்களில் உள்ள 111 சுகாதார வைத்தியப் பிரிவுகளில் மீண்டும் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நுளம்புகள் இனப்பெருக்கம் அடையக்கூடிய இடங்கள் தொடர்கில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அகற்றப்படாமல் இருந்தால்  சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில், இவ் வருடம் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 26,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளார்கள்.

45 சதவீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு டெங்கு காய்ச்சலால் குழந்தை ஒன்று மரணித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 26,775 டெங்கு நோயாளிகளும், 14 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.  மேல், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.