மட்டக்களப்பு வாவியில் நீர்த்தாவரங்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுவதால் முதலைகள் பெருகிவிட்டதாகவும், இவற்றால் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து எனவும் இந்த சூழ்நிலையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மீனவர்கள் அச்சத்தோடு தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் பெருகிவரும் ஆற்றுவாழை எனப்படும் நீர்த்தாவரங்களால் முதலைகளின் பெருக்கமடைந்துள்ளன.
அத்துடன் வாவி அழிவடைந்து வருவதாலும் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த வாவியில் மீன்கள் பாடல் இசைத்ததால், “பாடும் மீன்கள் வாழும் வாவி” என மட்டக்களப்பு வாவி அழைக்கப்படுகிறது.
இந்த வாவியில் சுமார் 15 ஆயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த வாவியில் ஆற்றுவாழைத் தாவரம் அதிகமாக வளர்ந்துள்ளதால் மீனவர்கள் தோணிகளை செலுத்த முடியாமல் அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த வாவியில் முதலை, பாம்பு போன்ற மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் உயிரினங்கள் வாழ்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் இந்த ஆற்றுவாழைகளுக்குள் ஒளிந்திருந்த முதலையொன்று மீனவர் ஒருவரை இழுத்துச் சென்று கொன்றுள்ளதுடன், பல கால்நடைகள் காணாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த வாவியின் தூய்மையை அழிக்கக்கூடிய ஆற்றுவாழைகளை அகற்றுமாறு மீனவர்கள் உரிய தரப்பினரை கோருகின்றனர்.


