நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு மனசாட்சி என்பதான்று உள்ளதா, ஸ்தாபிக்கப்பட்டுள்ள 30 உள்ளுராட்சிமன்றங்களில் 23 சபைகள் தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது. மிகுதியாகவுள்ள மன்றங்களையும் கைப்பற்றுவோம் என பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற விளையாட்டில் ஊக்குப்பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஈரான் – இஸ்ரேல் பிரச்சினை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு இடமளிக்காத காரணத்தால் அவர்கள் சபை வெளிநடப்பு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்கட்சித் தலைவருக்கு காலை வேளையில் 27ஃ2 இன் கீழ் விடயங்களை முன்வைப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அவர் ஈரான் – இஸ்ரேல் பிரச்சினை பற்றி பேசவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி கடந்த மாதத்தில் இருந்து தாம் தான் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவதாக குறிப்பிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் திங்கட்கிழமை (16) தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையை கைப்பற்றியது. இந்த கலக்கத்தில் இருந்து வெளியேறுவதற்காக ஈரான் – இஸ்ரேல் பிரச்சினை பற்றி பேசுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுக் கொண்டு சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து, சபையில் இருந்து வெளியேறினார்கள்.
ஆளும் தரப்பினர் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலங்களில் ‘ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இனவாதத்தை பரப்பி இந்த நாட்டை அழித்ததாகவும், நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆகவே பொதுஜன பெரமுன மீண்டும் தலைத்தூக்க இடமளிக்க கூடாது ‘ என்றார். ஆனால் தற்போது நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து உள்ளுராட்சிமன்றங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார், ஆகவே எதிர்க்கட்சித் தலைவருக்கு மனசாட்சி என்பதொன்று உள்ளதா, ஸ்தாபிக்கப்பட்டுள்ள 30 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் 23 அதிகார சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
மிகுதியாகவுள்ள உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம். ஆளும் தரப்பிடம் 159 பெரும்பான்மை உள்ளது என்பதை எதிர்க்கட்சி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

