திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் திங்கட்கிழமை (16) காலை, நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றும், வழங்கப்படாத நிலுவை சம்பளத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் கோரி, நிறுவனத்தின் முக்கிய வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு சம்பள அளவுத்திட்டத்தின் கீழ் நியமனம் பெற்ற இவ்வூழியர்கள், கடந்த ஒரு வருடமாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினர். தொடர்ந்து ஏமாற்றத்துடன் செயல்பட்டுவரும் நிர்வாகத்துக்கு எதிராக, எந்தவொரு நபரும் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாதவாறு, நிறுவன வாயிலை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரிகள், நிறுவன மேலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி இவ்விடயம் தொடர்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நேர்முகத் தேர்வு நடைபெறும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், அது இன்றுவரை நடைபெறவில்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும், சம்பளம் செலுத்தப்படவில்லை. அமைச்சரான சுணில் ஹந்துனெத்தியுடன் பேச்சுவார்த்தையின் போது, பெப்ரவரி மாதத்தில் சம்பளம் வழங்கப்படும் என பொதுமுகாமையாளர் கூறியதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நிர்வாகம் நாளாந்த கூலி அடிப்படையில் நியமனத்தை மாற்ற தீர்மானித்ததாகவும், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள், தங்களுக்கான உரிமைகளை பெறும் வரை தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து செல்வதாகவும் வலியுறுத்தினர்.



