ஜூன் 14 ஆம் திகதி இடம்பெறும் உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு, ஜூன் 14 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றதுடன், அதனுடன் இணைந்ததாக இரத்த தானம் செய்பவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
“வாழ்க்கைக்கு நம்பிக்கையை கொடுப்போம், இரத்த தானத்திற்காக ஒன்றுபடுவோம்” என்பது உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளாகும். நாட்டின் வருடாந்த இரத்தத் தேவையில் சுமார் 85% நடமாடும் இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்களினால் செய்யப்படும் ஒப்பற்ற பங்களிப்பாகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
தேசிய இரத்தமாற்ற சேவைக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் 450,000 இரத்த அலகுகளில், 380,000 க்கும் மேற்பட்டவை அல்லது சுமார் 85% இந்த நடமாடும் முகாம்களிலிருந்து சேகரிக்கப்படுகின்றன, இந்த நோக்கத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 5,000 நடமாடும் இரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்த பாராட்டு நிகழ்வில் சுமார் 1,500 இரத்த தானம் செய்பவர்களும் 1,000 இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்களும் பங்கேற்கிறார்கள்.
இனம், மதம், மாகாணம் அல்லது பிரதேசம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வணிக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பாடசாலைகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் தனிநபர்கள் உட்பட பல்வேறு வகையான பங்களிப்பாளர்கள் இங்கு விருதுகளைப் பெறுகிறார்கள்.
இந்த ஏற்பாட்டாளர்கள், எந்தவொரு தனிப்பட்ட நன்மையையும் எதிர்பார்க்காமல், தங்கள் செல்வம், உழைப்பு மற்றும் நேரத்தை இந்த நோக்கத்திற்காக தானாக முன்வந்து அர்ப்பணிக்கும் பிரிவினராகும். இலங்கையில் உள்ள இந்த தனித்துவமான இரத்த தான முறைமை உலகின் வேறு நாடுகளில் காணக் கிடைப்பதில்லை.
அரச நிறுவனங்களுக்கு இரத்த தானம் செய்வதற்காக வருடத்திற்கு ஒரு நாளை ஒதுக்கும் திட்டத்தை எதிர்காலத்தில் ஒரு முறையான திட்டத்துடன் மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
பாடசாலை முறைமையினுள்ளும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எதிர்கால இரத்த தானம் செய்பவர்கள் உருவாகும் இடமாக பாடசாலை முறைமை இருப்பதால் இது மிகவும் முக்கியமானது.
இரத்த தானம் செய்பவர்கள் கோவிட் தொற்றுநோய் போன்ற சிரமங்களுக்கு மத்தியிலும், அவர்கள் தங்கள் பொறுப்புகளை மறக்காமல் தங்கள் தேசியப் பொறுப்பை நிறைவேற்றினர். இன்று இலங்கை தன்னார்வ இரத்த தானம் மூலம் 100% இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாடாக மாறியுள்ளது என்றும், அவர்களின் உன்னத பணிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

