டுபாயில் 67 மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ; 3,800 பேர் வெளியேற்றம்

73 0

டுபாயில் மரினா பகுதியிலுள்ள 67 மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு சுமார் 6 மணி நேரம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் மற்றும் அவசர மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இந்த குழுவினர் கட்டிடத்தில் உள்ள 764 வீடுகளில் தங்கியிருந்த 3 ஆயிரத்து 820 பேரை பத்திரமாக வெளியேற்றினார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் குடியிருப்பு கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் 2 முறை இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து வெளியேறிய அனைவரும் சாலைகளில் காத்திருந்தனர். அமீரகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இரவு நேரத்தில் அந்த வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

வீடுகளில் இருந்து உடுத்திய துணியுடன் வெளியேறிய முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் வீதிகளில் நிலவிய கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள டிராம் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக அடுக்குமாடி கட்டிடத்தின் அருகில் சென்று கொண்டிருந்த டிராம் சேவை டுபாய் மரினா நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைரா நிலையம் வரை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து அந்த கட்டிடத்தின் 49-வது மாடியில் தங்கியிருந்த ஒருவர் கூறும்போது, ”தீ விபத்து ஏற்பட்டது தொடர்பான எச்சரிக்கை அலாரம் ஒலிக்கவில்லை. எனினும் புகையின் வாசத்தை வைத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது என அறிந்து கொண்டு கட்டிடத்தில் இருந்து படியின் வழியாக கீழே வந்தேன். இதனால் உயிர் பிழைக்க முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.