பலாங்கொடை ரஜவக்க மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணையை மேற்கொண்டு ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், பாதுகாப்பற்றதென சந்தேகிக்கின்ற மரங்கள் பாடசாலை வளாகத்தில் காணப்படின், உடனடியாக பிரதேச செயலகம் மற்றும் மரக்கூட்டுத்தாபனத்துக்கு தெரியப்படுத்துமாறும் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
அண்மையில் பலாங்கொடை ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரமொன்றின் பகுதி முறிந்து விழுந்ததனால் ஏற்பட்ட இழப்பை கவனத்திற்கொண்டே மதுர செனவிரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குழுவொன்றை நியமித்து ஆரம்பக்கட்ட விசாரணையை மேற்கொள்ளும்படியும், ஒரு வாரத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும், அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதன்போது பிரதி அமைச்சர் உத்தியோகத்தர்களுக்குத் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் பொறுப்பு மீறல் இடம்பெற்றுள்ளதா என்பதைப் பற்றிய விசேட கவனத்துடன் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் உத்தியோகத்தர்களுக்குத் தக்கவாறு சுட்டிக்காட்டினார்.
அழிவடைந்த கட்டடத்திற்குப் பதிலாக புதிய கட்டடத்தை நிர்மாணிக்கத் தேவையான அலுவல் நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
அதற்கிணங்க, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தினால் இரண்டு மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஒரு பிரதிக் கல்விப் பணிப்பாளர் அடங்கிய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் தர்ஷனீ இத்தமல்கொட தெரிவித்தார்.
இதுவரையில் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன நேரில் சென்று பார்தது விசாரித்தார்.
விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரில், ஆறுபேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கே.ஏ.எல்.எல். கே. ஆரச்சி தெரிவித்தார்.
சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு காப்பீட்டின் மூலம் நட்ட ஈட்டை வழங்குவதற்கான அல்லது அதற்கான தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனையை இதன்போது பிரதி அமைச்சர் வழங்கினார்.
விபத்தில் உயிரிழந்த பலாங்கொடை, பிபிலேவெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட கலைப்பிரிவில் கல்வி பயின்றுவந்த கிவிர ஹிருஜய எனும் 17 வயது மாணவரின் இறுதி கிரியை நிகழ்விலும் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.
விபத்துக்குறித்து அரசாங்கம் ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்த பிரதி அமைச்சர், உயிரிழந்த மாணவர் சார்பில் கல்வி அமைச்சிலும் இடர் கட்டுப்பாட்டு திணைக்களத்திலும் தலையிட்டு அந்தக் குடும்பத்திற்கான நியாயத்தைப் பெற்றுத்தருவதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த மாணவரின் இறுதி கிரியை இன்று இடம்பெறுவதாகவும் கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் மாகாண சபை ஆகியன இதுபற்றி விசேட தலையீடு செய்ய வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
பிள்ளைகளின் பாதுகாப்புக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டுமெனவும், பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பற்ற மரங்கள் காணப்படின் உடனடியாக அதுபற்றி பிரதேச செயலகம், மரக் கூட்டுத்தாபனம் மற்றும் கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்துமாறும், குறித்த தரப்பு அதற்கான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன இதன்போது தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த புஷ்பகுமார, சுனில் ராஜபக்ஷ, பலாங்கொடை வலய கல்விப் பணிப்பாளர் பிரபாத் வர்ணசூரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




