களுத்துறையில் மின்சார சபை ஊழியர் கொலை ; ஆள்மாறி வெட்டியதாக பிரதான சந்தேகநபர் வாக்குமூலம்!

23 0

களுத்துறை – பனாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சார சபை ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் கடந்த 07 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

களுத்துறை – பனாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் சிலர் வீட்டின் உரிமையாளரான மின்சார சபை ஊழியரை வெட்டிக் கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை – மின்னேரிதென்ன பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதமும் முச்சக்கரவண்டியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கொலை சம்பவம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று சந்தேக நபரும் அவரது சகாக்களும் மதுபோதையில் இருந்ததால் தவறுதலாக வேறொரு வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் உரிமையாளரான மின்சார சபை ஊழியரை வெட்டிக் கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் தலைமையில் இந்த கொலை திட்டமிடப்பட்டதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (13) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.