2025ஆம் ஆண்டுக்கான பதிப்பு உதவித் திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்து

29 0

இலங்கையின் எழுத்துச் சமூகம் தங்கள் படைப்புகளை அச்சில் வெளியிடுவதை ஆதரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு 2025ஆம் ஆண்டுக்கான பதிப்பு உதவித் திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கை எழுத்தாளர்கள் நூல்களை அச்சிட்டு வெளியிட உதவிம் நோக்கில், தேசிய நூலக மற்றும் ஆவண சேவை சபையால் ஆரம்பிக்கப்பட்ட பதிப்பு உதவித் திட்டத்துக்கான 2025ஆம் ஆண்டின் முதல் சுற்றுக்கான ஒப்பந்தங்கள் கடந்த 9ஆம் திகதி, தேசிய நூலக மற்றும் ஆவண சேவை சபை மையத்தில் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சபை தலைவர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, பணிப்பாளர் நாயகம்  W. சுனில், நூலக மேம்பாட்டு, தரநிலைத்தன்மை மற்றும் பதிப்பக பிரிவின் இயக்குனர் செனானி பண்டார, பதிப்பகம் மற்றும் நூலாசிரியர் அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் மற்றும் பிரிவுத் தலைவர் மலிக் சி. தர்மவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில், கல்விசார் நூல்கள் 3, சிறுகதைத் தொகுப்புகள் 2, சிறுவர் நூல்கள் 8 மற்றும் இலக்கிய நூல்கள் 3 ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள், சபையின் தலைவர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய நூலக மற்றும் ஆவண சேவை சபையின் பணிப்பாளர் நாயகம் W. சுனில், “மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டம் மீண்டும் செயற்பாட்டில் கொண்டுவரப்பட்டு, தரமான கையெழுத்துப் பிரதிகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதில் பெருமிதம் கொள்கிறோம்” என தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டின் முதற்கட்டமாக இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட நிலையில், தேர்வுசெய்யப்பட்ட பிற கையெழுத்துப் பிரதிகளுக்கான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படும் என்றும், 2026ஆம் ஆண்டுக்கான பதிப்பு உதவித் திட்டத்துக்காக கையெழுத்துப் பிரதிகளை பெறும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் மேற்கொள்ளப்படும் என்றும் சபை தரப்பில் அறிவிக்கப்பட்டது.