மத்திய வங்கி விசேட அறிக்கை

53 0

கடந்த காலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட வணிகங்களை நிலையான முறையில் மீளுருவாக்கம் செய்வதற்கு வசதி செய்யும் நோக்கத்துடன், 2025.03.31-ஆம் திகதிக்கு முன்னர் தொடர்புடைய வங்கிகளுடன் வணிக மீளுருவாக்கத்திற்காக கலந்துரையாடல்களைத் தொடங்கிய சிறு மற்றும் நடுத்தர அளவிலான கடன் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி, அனுமதிபெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதிபெற்ற சிறப்பு வங்கிகளுக்கு (இனி அனுமதிபெற்ற வங்கிகள் என குறிப்பிடப்படும்) அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெளியிடப்பட்ட 19.12.2024 திகதியிட்ட 2024 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் 01.01.2025 திகதியிட்ட சுற்றறிக்கையின் துணைப் பிரிவின்படி இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, பாதிக்கப்பட்ட கடன் வாடிக்கையாளர்களுக்கு வட்டி சலுகைகள் மற்றும் புதிய கடன்கள் வழங்குதல் உள்ளிட்ட மேலும் சலுகைகளை வழங்குமாறு அனுமதிபெற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி, தகுதியுள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான கடன் வாடிக்கையாளர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக அனுமதிபெற்ற வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2025.06.15 முதல் 2025.06.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வணிக மீளுருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு அனுமதிபெற்ற வங்கிகளுடன் தொடர்பு கொண்ட கடன் வாடிக்கையாளர்கள், இந்த சலுகைகள் தொடர்பான மேலதிக தகவல்களை தொடர்புடைய அனுமதிபெற்ற வங்கிகளிடமிருந்து பெறலாம்.