தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை வேகமாக தவிர்த்து வருகின்றனர். சுற்றுச்சூழலில் சத்தான மற்றும் சிறந்த பொருட்கள் காணப்பட்டாலும், பள்ளிகளில் அவை குறித்து எவ்வளவு தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், சிறுவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்புவதில்லை. பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்துக்காக இன்று (11) காலை பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
சுகாதார அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது.
ஊட்டச்சத்து விடயத்தில் வெகுஜன ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஊடக நிறுவனங்கள் ஒளிபரப்பும் செய்திகள் மற்றும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து அரசு மற்றும் தனியார் ஊடகங்களும் ஊட்டச்சத்து தொடர்பான சரியான செய்தியை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
ஊட்டச்சத்து என்பது சுகாதாரத் துறையுடன் மட்டும் தொடர்புடைய ஒரு விடயம் அல்ல. மாறாக பல அமைச்சகங்களின் தலையீட்டின் மூலம் வெற்றிகரமாக அடைய வேண்டிய ஒரு விடயம்.
இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதம் ‘காய்கறிகள் மற்றும் பழங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருளின் கீழ் நான்கு முக்கிய விடயங்களை அடையாளம் கண்டு சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தினமும் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், ஒரு வகை கீரை மற்றும் இரண்டு வகையான பழங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கிய விடயமாகும்.
முடிந்தவரையில், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல், குறைந்த விலையில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தெரிவு செய்தல் என்பன முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றன என்றார்.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, யுனிசெஃப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர்கள், துணை இயக்குநர்கள், மாகாண சுகாதார சேவை இயக்குநர்கள், பிராந்திய சுகாதார சேவை இயக்குநர்கள், மருத்துவமனை இயக்குநர்கள், சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு, அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

