பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் .
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு, நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை உடையார் கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.
அதன் பின் சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, அவ்வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று, நோயாளர் காவு வண்டிக்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த வைத்தியர், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில், சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.
அதன் பின், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது, மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், வசதியற்ற நோயாளர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.


