அரச நிறுவனங்களை மீட்டெடுக்க நாம் செயற்பட்டு வருகிறோம்

68 0

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“பௌத்த தர்மத்தால் முழு உலகமும் ஒளிரட்டும்” என்ற தொனிப்பொருளின் கீழ், இம்முறை, தேசிய பொசொன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை தேசத்தை நாகரிக மாற்றத்திற்கு இட்டுச் சென்ற மகிந்த தேரரின் வருகை மற்றும் மிஹிந்தலையை மறந்துவிட்டு, தேசிய பொசொன் நிகழ்வை கொண்டாட முடியாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எனவே, இவ்வாறான ஆன்மீக விழுமியங்களைக் கொண்ட நிலத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது ஒரு அரசின் பொறுப்பாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தப் பொறுப்பை பூமியுடன் உணர்வுபூர்வமான தொடர்புடைய பிரஜைகளால் மாத்திரமே நிறைவேற்ற முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அநுராதபுர நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் நமது நாடு தேரவாத பௌத்த தத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக மாறியது. சமூக மாற்றத்திற்கும் ஆன்மீக விழிப்புணர்வுக்கும் வழிவகுத்த இந்த அற்புதமான நிகழ்வு, வெறும் மத அர்த்தத்தைத் தாண்டி, கலாசாரம், சமூகம் மற்றும் அரசியல் உட்பட நமது நாட்டின் அனைத்து அம்சங்களிலும் மிகவும் மேம்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்த சமூகத்தை மீண்டும் இந்த பூமியில் நிலைநிறுத்துவதன் மூலம் நாட்டிற்கு அவசியமான சமூக மற்றும் சுற்றாடல் நெறிமுறை சார்ந்த புதிய மனப்பான்மையுடன் கூடிய நவீன நாகரீக அரசை கட்டியெழுப்புவதற்கான கைவிட முடியாத பொறுப்பை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இலங்கையின் முதல் நகரம், முதல் குளம், முதல் அறுவை சிகிச்சைத் தளம் மற்றும் யோத கால்வாய் போன்ற பாரம்பரியங்களைக் கொண்ட அநுராதபுரத்தை அதன் பண்டைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்திய உதவியின் கீழ் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.