காணி வர்த்தமானி இரத்தாகும் திகதி குறித்து லால்காந்தவுடன் கலந்துரையாடி அறிவிக்கிறேன்

11 0

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி இரத்துச்செய்யப்படும் திகதி தொடர்பில் காணி அமைச்சர் லால்காந்தவுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிவிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகள் 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அவ்வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக இரத்துச்செய்யவேண்டும் எனக்கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்துச்செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.

அதேபோன்று பிரதமருக்கும் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது காணி அமைச்சர் லால்காந்தவினால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது இவ்விவகாரம் பற்றி எந்தவொரு விசேட கூற்றும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வர்த்தமானி அறிவித்தல் எப்போது இரத்துச்செய்யப்படும் என குறித்த திகதியொன்றை அறிவிக்குமாறு குறுந்தகவல் ஊடாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் தான் கோரியிருப்பதாகவும், இதுபற்றி திங்கட்கிழமை (9) பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் பேசவிருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த சனிக்கிழமை (7) தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இதுபற்றி கஜேந்திரகுமாரிடம் வினவியபோது, இவ்விடயம் தொடர்பில் காணி அமைச்சர் லால்காந்தவுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது குறுந்தகவலுக்குப் பதில் அனுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளருக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும், அவரும் இதுகுறித்து உடனடியாக ஆராய்வதாக உறுதியளித்திருப்பதாகவும் கஜேந்திரகுமார் கூறினார்.