மாத்தறை வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட 1, 24, 25 மற்றும் 26 ஆம் இலக்க சாட்சியாளர்களை புதன்கிழமை காலை குழுவில் முன்னிலைப்படுத்தவும், அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கும் உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அனுமதி வழங்கினார்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிக்கான அதிகாரத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை மற்றும் அவரது துர்நடத்தை ஆகிய காரணிகளை உள்ளடக்கிய வகையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு குழு திங்கட்கிழமை (9) குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி சூரசேன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
நீதியரசர் (ஓய்வுநிலை) என்.பி.இத்தவெல, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் பிரசன்னமாகியிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொசிலிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், சொசிலிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
அத்துடன் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மற்றும் பொலிஸ்மா அதிபர் சார்பில் சட்டத்தரணி சஞ்சய வீரவிக்ரம ஆகியோர் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புப்பட்ட சாட்சியங்கள் சம்பந்தமாக சத்தியக்கடதாசிகள் தொடர்பில் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்பின் நிலைப்பாடு குழுவின் முன்னிலையில் சட்டத்தரணி சஞ்சய வீரவிக்கிரமவால் முன்வைக்கப்பட்டது.
2023.12.30 அல்லது 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்ச10ட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை ஆராய்வதாக பிரதிவாதியின் சட்டத்தரணி குறிப்பிட்டிருந்த நிலையில் அவர் ஒரு தினம் மாத்திரமே குறித்த சாட்சியங்களை ஆராய்ந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸ் குழு முன்னிலையில் குறிபபிட்டார்.
16 ஆம் இலக்க சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணை செய்வது அவசியமற்றது என்று பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சஞ்சய வீரவிக்கிரம இதன்போது வலியுறுத்தினார்.இதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் இணக்கம் தெரிவித்தார்.
மாத்தறை வெலிகம துப்பாக்கிச்ச10ட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரசாயன பகுப்பாய்வு அறிக்கை, நீதிமன்ற அறிக்கை மற்றும் உடற்கூறு பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் குழுவில் சமர்ப்பித்தார்.
இரு தரப்பின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை ஆராய்ந்த நீதியரசர். பி.பி சூரசேன மாத்தறை வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட 1, 24, 25 மற்றும் 26 ஆம் இலக்க சாட்சியாளர்களை நாளை புதன்கிழமை காலை குழுவில் முன்னிலைப்படுத்தவும், அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கினார். இதற்கமைய சிறப்பு விசாரணை குழு நாளை காலை 09.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.

