இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் !

74 0

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற கொள்கலன் கப்பல், கொழும்பிலிருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் வைத்து இன்று திங்கட்கிழமை (9) தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

கப்பலில் ஏற்பட்ட பல வெடிப்புகளைத் தொடர்ந்து தீப்பற்றியதால், 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொள்கலன் கப்பலில் ஆபத்தான 4 பொருட்கள் உட்பட வேறு பொருட்கள் இருந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களில் 18 பேர் கடலில் குதித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 4 பேரை காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.