தமிழகத்தில் முருகன் அவதாரத்தை எடுத்துள்ளது பாஜக. இதற்கு மக்கள் ஏமாறமாட்டார்கள், முருகனும் ஏமாறமாட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் வரும் 14-ம் தேதி பேரணி நடைபெறவுள்ளது. ஜனநாயகத்தைக் காப்பவர்களும், மதச் சார்பின்மையைப் பாதுகாப்பவர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டும்.பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுத்து வருகிறது. உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ராமர் வடிவம், மேற்கு வங்கத்தில் துர்கா தேவி, மத்திய இந்தியாவில் விநாயகர், தமிழகத்தில் முருகன் அவதாரத்தை எடுத்துள்ளது. வட மாநிலங்களில் பாஜக செய்யும் இதுபோன்ற அரசியல் தமிழகத்தில் எடுபடாது. முருகன் பெயரில் மாநாடு நடத்துவதும் இங்கு எடுபடாது. தமிழ் மக்களும் ஏமாறமாட்டார்கள், தமிழ் கடவுள் முருகனும் ஏமாறமாட்டார்.
வட மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் `மேட்ச் பிக்ஸிங்’போல உள்ளது என்று ராகுல் காந்தி கூறியிருப்பது உண்மைதான். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து பாஜக சூதாட்டம் நடத்தி வருகிறது. அனைவரும் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராகப் போராடும் நிலை உருவாக வேண்டும். 2026 தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துவிடும். பாஜக அவர்களுக்கு பலம் உள்ளது போன்று காட்டிக்கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.
வலையில் சிக்கிய அதிமுக… சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலில் கட்சி அலுவலகத்தை திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாகவில்லை. அமித்ஷா தமிழகத்துக்கு அடுத்தடுத்து வந்து கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார். இப்போதைக்கு அதிமுக மட்டுமே பாஜக வலையில் சிக்கி உள்ளது. மற்ற கட்சிகள் உடன்படவில்லை. தமிழகத்தில் வெற்றி பெறும் வலுவான கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது.
எங்களது நிலைப்பாடு கூட்டணி ஆட்சி என்பதுதான். அதற்கான சூழ்நிலை தற்போது தமிழகத்தில் ஏற்படவில்லை. அதற்காக, கூட்டணி ஆட்சி நிலைப்பாட்டை நாங்கள் கைவிடவும் இல்லை. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி குறித்து வலியுறுத்த மாட்டோம்” என்றார்.