விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமான ஆயுதங்கள் புலம்பெயர் அமைப்புக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை முழுமையாக நிராகரிக்கிறேன். 30 வருடகாலமாக விடுதலை புலிகள் இயக்கத்துடனான போர் நிலவியது. ஒருமுறை கூட கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கொள்கலன்களில் ஆயுதங்கள் கொண்டு வரப்படவில்லை. பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பொய்யுரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுங்கத் திணைக்களத்தின் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் ஆயுதங்கள்,போதைப்பொருட்கள், தங்கம் ஏதும் இருக்கவில்லை. பிளாஸ்டிக், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் கைத்தொழில் மூலப்பொருட்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருந்தன.60 சதவீதமான கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படுகின்றன. இதுவொன்றும் புதிதல்ல, அனைத்து கொள்கலன்களையும் விடுவிக்க வேண்டுமாயின் கொள்கலன் விடுவிப்புக்கு மூன்று மாதங்களேனும் செல்லும் எனவும் குறிப்பிட்டார்.
சுங்கத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சுங்கத்துக்குள் கடந்த ஜனவரி மாதமளவில் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து கண்காணிப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அவதானமற்ற நிலையில் உள்ள கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இருந்து அவதானமற்ற நிலையில் உள்ள கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படுகிறது.
அவதானமற்ற நிலையில் உள்ள கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்ததால் குறுகிய காலத்துக்குள் கொள்கலன் நெரிசலுக்கு தீர்வு காண முடிந்தது.323 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது குறித்து பல்வேறு தரப்பினர் மாறுப்பட்ட பல கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
கைத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள், துணி வகைகள், இரசாயன பதார்த்தங்கள்,தேசிய உற்பத்தியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மின்சாதன பொருட்கள், விலங்கு தீவனம், கடதாசி,உரம், சீமெந்து உள்ளிட்ட பொருட்களே இந்த கொள்கலன்களில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
323 கொள்கலன்களில் பெரும்பாலானவை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். இதற்கு மேலதிகமாக இந்தோனேசியா, ஹொங்கொங், மலேசியா, தென்கொரியா,சிங்கப்பூர், சுவிஸ்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்தும் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த கொள்கலன் இறக்குமதியாளர்களின் சகல விபரங்களும் சுங்கத்திடம் உள்ளது. நிதியமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவுக்கும்,குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும், இந்த ஆவணங்களை ஒப்படைத்துள்ளோம்.சகல ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.
நூற்றுக்கு 60 சதவீதமான கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படுகின்றன. இது ஒன்றும் சுங்கத்துக்கு புதிதல்ல, எதிர்காலத்திலும் பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிக்கப்படும். அனைத்தையும் பரிசோதிக்க வேண்டுமாயின் கொள்கலன்களை விடுவிக்க குறைந்தது மூன்று மாதங்களேனும் செல்லும்.
சட்டவிரோதமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுமாயின் அது குறித்து புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியதாக கிடைக்கப்பெறும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் முழுமையாக பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
323 கொள்கலன்களில் தங்கம், ஆயுதங்கள், போதைப்பொருள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த கொள்கலன்களில் சட்டவிரோதமான பொருட்கள் ஏதும் உள்ளடங்கவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்குரிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளோம்.
இந்த கொள்கலன் விடுவிப்புக்கு வெளியாட்களில் இருந்து எவ்வித அழுத்தமும் ஏற்படவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.
துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கொள்கலன் விடுவிப்புக்கு எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பதையும் தெளிவாக குறிப்பிட முடியும்.அனைத்து தகவல்களையும் வெளியிட முடியாது. இருப்பினும் அதிகாரமிக்க தரப்புக்கு சகல ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்கியுள்ளோம். இறக்குமதியாளர்கள் தொடர்பான இரகசியங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சுங்கத்திணைக்களத்துக்கு உண்டு.
உள்ளக கட்டுப்பாட்டு பணிகளுக்காகவே கொள்கலன்களில் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிற முத்திரை பதிக்கப்படும்.இதனை திருட்டு பொருட்கள் உள்ளது என்று கருத முடியாது. அத்துடன் சிவப்பு முத்திரை பதித்த கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவிப்பது ஒன்றும் புதியதல்ல,
இந்த கொள்கலன்கள் ஊடாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமான ஆயுதங்கள் புலம்பெயர் அமைப்புக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை முழுமையாக நிராகரிக்கிறேன்.30 வருடகாலமாக விடுதலை புலிகள் இயக்கத்துடனான போர் நிலவியது.
ஒருமுறை கூட கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கொள்கலன்களில் ஆயுதங்கள் கொண்டு வரப்படவில்லை. ஆகவே மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பொய்யுரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

