கண்டி மாவட்டத்தில் சில இடங்களில் தரம் குன்றிய விதை நெற்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நெற் பயிறுடன் சேர்ந்து களைகளும் உருவாகி வருவதாகவும் கண்டி மாவட்ட விவசாயக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி மத்திய மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.ஜி.என். சந்தமாலி மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி களைகளுடன் கூடிய நெற்பயிர் வளரக் கூடிய நிலையை சீராக்கி நெற்களைகளை உடன் அகற்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இதற்காக களை நெற்பயிர்களைக் களையும் வாரம் ஒன்று அறிவிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காது விட்டால் அடுத்த போக உற்பத்தியில் குறிப்பிட்டளவு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே விவசாயிகள் விதை நெல் தெரிவின் போது தரமான நெல்லையே கொள்வனவு செய்தல் வேண்டும்.
மேற்படி நெல்லுடன் கலந்துள்ள போலி விதை நெல்லினால் எதிர்பார்க்கும் பயன் கிட்டாது. மினிப்பே மற்றும், முறப்பொலஹெல பிரதேசத்திலே இவ்வாறு நெற்களைகளை உருவாக்கும் விதை நெல் காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சாதாரண நெற்பயிருடன் சேர்ந்து இவை வளருவதுடன் அவற்றை அகற்றுவது சிரமமான விடயம். எனவே இம்மாத இறுதியில் மேற்படி களை இனங்களை அகற்றும் வாரம் பற்றி அறிவிக்கப்படும் என்றார்.
இக் கூட்டத்தில் கண்டி மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த, மற்றும் விவசாயக் கழகங்களின் பிரதி நிதிகள், அரச அதிகாரிகள் உற்படப்பலர் கலந்து கொண்டனர்.


