வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மாவை சேனாதிராஜா அக்கறை காட்டியவர்

65 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள், வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறைகாட்டியவர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கோசல நுவன் ஜயவீர, JRP.சூரியப்பெரும, டொனால்ட் திஸாநாயக்க ஆகியோர் தொடர்பில், நேற்று (06) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அனுதாபப் பிரேரணைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தனது உரையில், இன்று மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாபப் பிரேரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொனால்ட் திஸாநாயக்க கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர். 1989இல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு நகர சபை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பாராளுமன்றில் இருந்த காலத்தில் பல நல்ல பணிகளை மக்களுக்கு ஆற்றியவர். அதன் பின்னர், பாராளுமன்றம் வர முடியாவிட்டாலும், தன்னுடைய பெயரில் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தை நிறுவி, இறக்கும் வரை தனது மாவட்ட மக்களுக்கு, தன்னாலான நல்ல பணிகளை செய்த ஒருவர். அவரது இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேபோன்று, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சூரியப்பெரும அவர்கள் ஒரு மூத்த அரசியல்வாதி. 1970இல் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், அதில் தோல்வியடைந்த பிற்பாடு, கட்சியின் தலைமையோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 1977இல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து, கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு பெரிய பதவியை வகித்தவர். ஒரு ஆசிரியராக இருந்த அவர், பாராளுமன்ற உறுப்பினராக உயர்ந்து நின்று, நாட்டுக்கும் மக்களுக்கும் நற்பணியாற்றியவர். எனவே, அவரது இழப்பால் கவலையுறுகின்ற அவரது குடும்பத்தினருக்கும் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேபோன்று, மறைந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரான கோசல நுவன் ஜயவீர, நாடாளுமன்றத்தில் ஒரு நான்கு மாதங்கள்தான் உறுப்பினராக இருந்தவர். அவர் ஒரு இளம் அரசியல்வாதியாக இந்தப் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து, ஒரு குறுகிய காலத்துக்குள், இந்தப் பாராளுமன்றத்தில் பல குழுக்களில் உறுப்பினராக இருந்து, தன்னாலான பல நல்ல பணிகளை செய்த ஒருவர். 1987ஆம் ஆண்டு பிறந்த அவர் ஒரு பொறியியலாளர். அவரைப் பிரிந்து அவருடைய குடும்பமும், ஆதரவாளர்களும் படுகின்ற வேதனையில் நாங்களும் பங்கேற்கின்றோம். அவரது இழப்பால் வாடுகின்ற அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இத்தருணத்தில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.