சர்வாதிகாரி போன்று செயற்படாதீர்கள் ; சபாநாயகரை நோக்கி சமிந்த விஜயசிறி தெரிவிப்பு

66 0

பாராளுமன்றத்தை ஒழுங்குப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு    சர்வாதிகாரியை போன்று செயற்படாதீர்கள். முன்னாள்   சபாநாயகர்கள்  இந்தளவுக்கு ஒருதலைப்பட்சமாக  செயற்படவில்லையென  ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி  சபைக்கு தலைமை தாங்கிய    சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்னவை நோக்கி குறிப்பிட்டார்.

பாராளுமன்ற நிலையியல்  கட்டளையை வீட்டில் இருந்து முதலில் கற்றுக்கொள்ளுங்கள்,  பல ஆண்டுகாலமாக  பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களுக்கு   நிலையியல் கட்டளையின் ஏற்பாடுகள் தெரியவில்லை. இது பெரியதொரு பிரச்சினையாகவுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம்  வெள்ளிக்கிழமை (06) கூடிய வேளையில் வாய்மூல   விடைக்கான  வினாக்களின் போது    ஒழுங்குப்பத்திரத்தில் உ ள்ள கேள்விகளுக்கு மேலதிகமாக விடயதானத்துக்கு அப்பாற்பட்ட கேள்விகளை கேட்க முடியாதென சபை முதல்வர்  பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டதை தொடர்ந்து   எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இதன்போது,   பாராளுமன்ற   நிலையியல் கட்டளையின் 92ஆவது பிரிவை சுட்டிக்காட்டி உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்  சமிந்த  விஜேசிறி,  ஒரு அமைச்சின் விடயதானத்துக்குள் உள்ளடங்கும் சகல   திணைக்களங்கள் மற்றும்  நிறுவனங்களுடன் தொடர்புடைய   விடயங்களை  மேலதிக கேள்வியாக கேட்கலாம் என்றார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், நிலையியல்  கட்டளையின்  பிறிதொரு ஏற்பாட்டை குறிப்பிட்டு,  சமிந்த விஜேசிறியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரையாற்றுவதற்கு சமிந்த   விஜேசிறி அனுமதி கோரிய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வேளையில்  சமிந்த விஜேசிறி, சபையை  ஒழுங்கு படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு  சபாநாயகர்  ஒருதலைப்பட்சமான முறையில்  சர்வாதிகாரி போல் செயற்படுகிறார். முன்னாள் சபாநாயகர்கள் இந்தளவுக்கு செயற்படவில்லையென குற்றஞ்சாட்டினார்.

இதன்போது  சபைக்கு தலைமை தாங்கிய  சபாநாயகர், பாராளுமன்ற நிலையியல்  கட்டளையை வீட்டில் இருந்து முதலில்  கற்றுக்கொள்ளுங்கள். பல ஆண்டுகாலமாக  பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களுக்கு   நிலையியல் கட்டளையின் ஏற்பாடுகள் தெரியவில்லை. இது பெரியதொரு பிரச்சினையாகவுள்ளதன பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை நோக்கி குறிப்பிட்டார்.