தமிழ்த்தேசிய விரோதக் கட்சியுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தையா?

83 0

உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாக சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் வியாழக்கிழமை (5) சந்தித்துப் பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுவரை காலமும் அரசாங்கத்தை ஆதரித்துவந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் அடிப்படை கொள்கையிலேயே வேற்றுமை நிலவும் பின்னணியில், இச்சந்திப்புக் குறித்து வினவியபோது வியாழக்கிழமை (5) சந்திப்பு நடைபெறவிருப்பதை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

இவ்விருதரப்பு சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்வர் எனவும் அவர் தெரிவித்தார்.