பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்பவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டுமாயின் பெருந்தோட்டங்களில் கல்வி துறை மேம்பட வேண்டும். களுத்துறை மாவட்டத்தில் உள்ள தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு ஏதேனும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்று தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கனாத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது மேலதிக கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதி கல்வி அமைச்சர், மதுர செனவிரத்ன வருமாறு பதிலளித்தார். களுத்துறை மாவட்டத்தில் 62 தமிழ் பாடசாலைகள் உள்ளன. களுத்துறை மாவட்டத்தில் கலைத்துறை பாடங்கள் கற்பிக்க கூடிய 08 பாடசாலைகளும் , வர்த்தகத்துறையில் கற்பிக்க கூடிய 17 பாடசாலைகளும் உள்ளன. பெரும்பாலான பாடசாலைகளில் கலை மற்றும் வர்த்தக பாடப்பிரிவுகள் ஒருமித்த வகையில் உள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழில் பாடசாலைகளில் நிலவும் பௌதீக மற்றும் மானிட வசதிகளில் நிலவும் குறைப்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன என்றார்.
இதன்போது எழுந்து மேலதிக கேள்விகளை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கனாத், நான் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.எமது பகுதியில் பெருமளவிலான தமிழ் பாடசாலைகள் உள்ளன. தோட்டப்பகுதிகளை அண்மித்த வகையில் சுமார் 45 ஆயிரம் பேர் வரையில் வாழ்கிறார்கள்.
தோட்டப்பகுதிகளில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக புளத்சிங்கள, அகலவத்தை மற்றும் பாலிந்தநுவர ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளில் பல பிரச்சினைகள் உள்ளன. பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டுமாயின் அவர்களின் பிள்ளைகளின் கல்வித்தரம் மேம்பட வேண்டும். இதற்கு ஏதேனும் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன, பெருந்தோட்ட பகுதிகளில் பல அடிப்படை பிரச்சினைகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இப்பகுதிகளில் வாழ்பவர்களின் பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது அனைவரது பொறுப்பாகும்.
தோட்ட பகுதிகளில் உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். சிறிபாத கல்வியியற் கல்லூரியில் இருந்து வெளியாகும் ஆசிரியர்கள் பெருந்தோட்ட பகுதிகளுக்கு சேவையில் அமர்த்தப்படுகிறார்கள்.
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்,யுவதிகளுக்கு அரச நியமனங்களை வழங்குவதற்கும், ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கும் உதவி ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இருப்பினும் இந்த தீர்மானம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

