வெளிவிவகார அமைச்சர் – இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சந்திப்பு

76 0

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் இஹாப் கலீல் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (2) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது காஸாவின் தற்போதைய நிலைவரம் மற்றும் இருதரப்புப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பலஸ்தீன விவகாரத்தில் இலங்கை வெளிப்படுத்திய நிலைப்பாட்டுக்கும், பிராந்திய மற்றும் சர்வதேசத் தளங்களில் பலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கும் பலஸ்தீன தூதுவர் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகளுக்கான முகவரகத்தின் ஊடாக காஸா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை வழங்கிய ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடைக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை காஸாவின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அமைச்சர் ஹேரத் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். ஐக்கிய நாடுகளின் சாசன விதிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் ஏற்பாடுகளுக்கிணங்க பலஸ்தீன மக்களின் அரசுக்கான உரிமை குறித்த இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் நீண்டகால பாதுகாப்பு, அமைதி மற்றும் செழுமையை அடைவதற்கு ஏதுவாக 1967 எல்லைகளின் அடிப்படையில் அயலில் வாழும் இரண்டு நாடுகளினதும் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு ஏற்ப பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதற்கு இலங்கை உறுதிபூண்டிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.