கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்துக்கு அருகில் கடந்த 31ஆம் திகதி இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த, பூநகரி செம்மன்குன்று பகுதியைச் சேர்ந்த நபரின் இறுதிக்கிரியை இன்று (3) நடைபெற்ற நிலையில், இறுதி ஊர்வலத்தின்போது இக்கொலைக்கு நீதி கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், பூநகரி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் பொது மக்களின் கையொப்பம் அடங்கிய மகஜரை கையளித்தனர்.
“வாள் வெட்டுக்குழுக்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்”, “உயிரை பறித்தவரை ஒருபோதும் மன்னிக்காதே; போதையை கூண்டோடு ஒழிப்போம்” போன்ற பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேர் பூநகரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






