குறைகளை சுட்டிக்காட்டுவதால் என்னை சிக்கவைக்க அரசாங்கம் முயற்சி

83 0

என்னை திருடன் என்று குறிப்பிட எவருக்கும் முடியாது. அரச அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளேன். எச்சந்தர்ப்பத்தில்  தவறான தீர்மானத்தை எடுக்கவில்லை. என்னை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும், சிக்கவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை நன்கு அறிவேன். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள தயாராகவுள்ளேன் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

விளையாட்டுத் துறை அமைச்சர்  பிங்கிரிய விளையாட்டு மைதானம் தொடர்பில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஒன்று இவருக்கு விடயம் தெரிந்திருக்க வேண்டும் அல்லது பிறிதொருவர் எழுதிக் கொடுத்ததை மனனம் செய்து குறிப்பிட்டிருக்க  வேண்டும்.

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர்கள் பற்றி பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம். நாங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் செயற்பட்டுள்ளோம்.பிங்கிரிய விளையாட்டு மைதான நிர்மாணிப்புக்கான பணிகள் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2018 ஏப்ரல் மாதமளவில் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் செயற்பட்டேன்.

அதுவரையான காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட மற்றும் மாகாண விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 1000 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை இடைநிறுத்தவில்லை. முன்கொண்டுச் சென்றோம்.இந்த நிதி தொகை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் கருத்திட்ட  செயன்முறைக்கு அமைய பகிர்ந்தளிக்கப்பட்டது.

2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் 12 மைதானங்களின் நிர்மாண பணிகள் நிறைவுபெறும் நிலையில் காணப்பட்டன.2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிங்கிரிய விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒருசதம் கூட நிதி ஒதுக்கப்படவில்லை.என்னுடனான அரசியல் முரண்பாடுகளினால் பிங்கிரிய விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படவி;லலை. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களுக்காக அபிவிருத்தி கருத்திட்டங்களை இடைநிறுத்தியது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தெரியாத விடயங்களை ஊடகங்கள் மத்தியில் குறிப்பிடுவதற்கு முன்னர் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டும். விலைமனு கோரல் பத்திரங்களை பரிசீலனை செய்ய வேண்டும்.ஆகவே  விடயங்களை அறியாமல் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.

என்னை திருடன் என்று குறிப்பிட எவருக்கும் முடியாது. அரச அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளேன்.எச்சந்தர்ப்பத்தில்  தவறான தீர்மானத்தை எடுக்கவில்லை. என்னை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும், சிக்கவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை நன்கு அறிவேன். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள தயாராகவுள்ளேன். ஆளும் தரப்புக்கு நான் தலைவலியாக உள்ளதால் எவ்வழியிலாவது என்னை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.