செயற்திறன்மிக்க தளத்தை சுவாமி விவேகானந்தர் கலாசார மையம் உருவாக்கியது

60 0

1998 ஆம் ஆண்டு கொழும்பில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தர் கலாசார மையம் (SVCC), எங்களிடையே கலாசார பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான ஒரு செயற்திறன்மிக்க தளத்தை உருவாக்கியது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஸ்ரீ விவேகானந்தா கலாசார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டங்கள், வெள்ளிக்கிழமை (30) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவிக்கையில்,

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் புலமைப்பரிசில் மாணவியாக, இந்தியாவில் நான் இருந்த காலம் வெறுமனே முறைசார் கல்வி அனுபவமாக மட்டுமல்லாமல்,  இந்திய நாகரிகம், கலாசாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியங்களின் செழுமை மற்றும் பன்முகத்தன்மை பற்றிய புரிதலை  பெற அருமையான வாய்ப்பாகவும் அமைந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார உறவானது மிகவும் ஆழமானதாகும்.

1998 ஆம் ஆண்டு கொழும்பில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தர் கலாசார மையம் (SVCC), எங்களிடையே கலாசார பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான ஒரு செயற்திறன்மிக்க தளத்தை உருவாக்கியது.

ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்ட கலாசார நிகழ்வுகளை (கண்காட்சிகள், நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், யோகா மற்றும் ஆயுர்வேத அமர்வுகள் மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் உட்பட) நடத்திவரும் இந்த மையம், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஆறு இலங்கை கலாசாரக் குழுக்கள் இந்தியாவில் நிகழ்ச்சிகளை நடத்த அழைக்கப்பட்டுள்ளன.  கலாசார இராஜதந்திரம் எவ்வாறு எல்லைகளைக் கடந்து, அரசியலைக் கடந்து, பரஸ்பர மரியாதையை வளர்க்கிறது என்பதை இந்தப் பரிமாற்றங்கள் அழகாகக் காட்டுகின்றன.

அதேபோன்று இந்தியாவில் பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளுக்காக இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசுகளுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

நேரு, ராஜீவ் காந்தி, மௌலானா ஆசாத், கலாநிதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (பொதுநலவாய), AYUSH, லதா மங்கேஷ்கர் போன்ற மதிப்புமிக்க புலமைப்பரிசில் திட்டங்கள் இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.

இலங்கையில் 400க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் (ஆயுர்வேதம், மானிடவியல் மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்) ICCR இன் முன்னாள் மாணவர்கள் என்பது இந்த உறவின் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாகும். மேலும் ஆனந்த சமரக்கோன், நந்தா மாலினி, பிரதீப் ரத்நாயக்க போன்ற புகழ்பெற்ற கலைஞர்களும் இதில் ஒரு பகுதியாக உள்ளனர் என்பதையும் கூற வேண்டும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நாகரிகம், வரலாறு, மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன, மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான கட்டிடக்கலை மற்றும் கலை மரபுகள் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளங்களாக மாறியுள்ளன.

2024 பெப்ரவரி மாதம் இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் (ICCR) விசேட விருந்தினர்கள் நிகழ்ச்சியில் அனுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவின் பிரதிநிதிகளுடன் பங்கேற்றார்.  இதன்போது குறிப்பாக, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தனது இந்திய பயணத்தின் போது, கேரளாவில் அரச தகவல் தொழில்நுட்பத் துறையும், குஜராத்தின் கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடும் அனுர குமார திசாநாயக்க விசேட கவனத்தை ஈர்த்ததாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட விசேட அதிதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பீடாதிபதிகள் மற்றும் இந்திய மொழிகள் மற்றும் அரங்கியல் கலைகளை கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.