மருந்து விநியோகத்துக்கு வெளிநாடுகளிடமிருந்து உதவி பெற விசேட திட்டம் – சுகாதார அமைச்சு

124 0

நாட்டுக்கு மருந்துகள் சரியான முறையில் விநியோகிப்பதை உறுதிபடுத்த வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக ஆதரவைப் பெறுவதற்கான சிறப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் குறைக்கப்படும் வரை, பற்றாக்குறையான மருந்துகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக உதவி பெற சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது குறித்த பிரச்சினைகளை தெளிவுபடுத்தி சுகாதார அமைச்சினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை அங்கீகரிக்கும் போது அமைச்சரவை வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, இலங்கை அரசாங்கம், பிற நாடுகளிலிருந்து மருந்துகளை நேரடியாகப் பெறுவதற்கான வழிமுறையின் கீழ் ஒரு முறையான குழுவை நியமித்து எதிர்கால நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

அந்த வழிமுறையின் கீழ், தேசிய கொள்முதல் அதிகாரசபையின் ஒப்புதலைப் பெற்று, அமைச்சரவையிடம் மீண்டும் சமர்ப்பிப்பதற்கான ஒரு துரிதப்படுத்தப்பட்ட திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாட்டின் மருந்து விநியோக வலையமைப்பை மீட்டெடுக்க முடியும்.

அதற்கமைய இந்த திட்டத்தை மேலும் செயல்படுத்த நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு, வர்த்தகம், வணிகம், உணவு மற்றும் கூட்டுறவு அமைச்சு, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் துறை ஆகிய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் தலைமை வகிக்கின்றார். இக்குழு சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தலைமையில் கூடியது.

அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மூலம் நாட்டுக்கான மருந்துகளை கொள்முதல் செய்யும் திட்டத்தை எவ்வாறு தொடங்குவது மற்றும் எதிர்காலத்தில் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் தொடர்புடைய ஆரம்ப நடவடிக்கைகளை விரைவாக முடித்து, இந்நாட்டு மக்களுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.