வீடொன்றின் மீது விழுந்த பாரிய மரம்

88 0

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதோடு, வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் விழுந்த மரத்தை நானுஓயா பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து அதை அகற்றும் வரை, நேற்று பிற்பகல் 1:00 மணி முதல் 2:00 மணி வரை சுமார் 1 மணித்தியாலயம் போக்குவரத்து தடைபட்டிருந்தது.

அத்தோடு, பகுதியளவு சேதமடைந்த வீட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

வீசும் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மற்றும் இணை வீதிகளிலும் வாகன சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இன்று காலை கொட்டகலை டிரேட்டன் கொலனி பகுதியிலும் மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று முழுமையாக சேதமமைந்துள்ளது.

யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று அதிகாலை 1:00 மணி முதல் கினிகத்தேனை-நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் 33,000 வோல்ட் உயர் மின்னழுத்த மின்கம்பி கொண்ட ஒரு மின்கம்பம், மரங்கள் மற்றும் பல பாறைகள் விழுந்ததாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹூலாங்வங்குவ எனும் பகுதியில் இந்த மரங்களும் மின்கம்பிகளும் விழுந்துள்ளதாகவும், இந்த சூழ்நிலையில், வீதியின் போக்குவரத்து சீரடையும் வரை ஹட்டன் வீதியின் ஊடாக வாகனங்களை ஓட்டுமாறு நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நோர்டன்பிரிட்ஜ் முதல் கினிகத்தேனை வரையிலான உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பு சரிந்ததால், நோர்டன்பிரிட்ஜ் மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, காசல்ரீ பகுதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, ஹட்டன்-நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் பல இடங்களில் பல பெரிய மரங்கள் விழுந்துள்ளதாகவும், இதனால் இன்று (30) காலை 9:00 மணி முதல் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லெதண்டி தோட்ட பகுதியில் மரம் விழுந்துள்ளதாகவும், மின்சார சபை ஊழியர்கள் விழுந்த மரங்களை வெட்டத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.