தபால் சேவையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

75 0

தபால் சேவையாளர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட காரணிகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பு வியாழக்கிழமை (29) முடிவுக்கு வந்ததுடன் இதன்காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியத்துக்குள்ளாகினர்.

தபால்  மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் இரண்டு நாட்கள் (48 மணிநேர) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அறிவித்து செவ்வாய்க்கிழமை (27) 4.30 மணியளவில் மத்திய தபால் பரிமாற்று நிலைய ஊழியர்கள் பணியிலிருந்து விலகினர். இதற்கமைய  புதன்கிழமை (28) நள்ளிரவு முதல் இரண்டு நாட்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அந்த சங்கம் தெரிவித்திருந்தது.

இதற்கமைய இந்த பணிபகிஷ்கரிப்பு வியாழக்கிழமை (29) இரண்டாவது நாளாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.

சம்பள உயர்வு,பதவி உயர்வு  மற்றும் ஆட்சேர்ப்பு  செயற்பாட்டில் நிலவும் தாமதத்திற்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பிரதான தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் சேவையை பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்த பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் ஜீ.ஜீ.சீ. நிரோஷன கருத்து தெரிவிக்கையில் இந்த துறையில் நாம் முகங்கொடுத்து பிரச்சினைகள் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தோம். இன்னும் எமக்கு சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லை.

எனினும் எதிர்காலத்தில் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லையாயின் எமது போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்றார்.

இந்நிலையில் இந்த பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் தபால் மா அதிபர் ருவன் சத்குமார குறிப்பிடுகையில் 34 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் உள்ளன. அவற்று துபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கமும் ஒன்றாகும். தற்போது இந்த தரப்பினரே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மற்றைய அனைத்து ஊழியர்களும் கடமைக்கு சமூகமளித்து உள்ளனர். நாடளாவிய ரீதியில் 3400 க்கும் அதிகமான உப தபால் நிலையங்கள் உள்ளன. அவை அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

எவ்வாறாயினும் நாட்டில் பல தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் ஊழியர்கள் கடமைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே கொழும்பு பத்தரமுல்லையில்  அமைந்துள்ள தபால் நிலையம் வியாழக்கிழமை (29) மூடப்பட்டிருந்த போதிலும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் காரியாலயத்துக்கு சமூகமளித்து பிரதான நுழைவாயிலுக்கு அருகில் காத்துக்கொண்டிருந்தனர். எனினும் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்து பொலிஸ் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவர்களுக்கு தண்டப்பணம் விதித்தனர்.