புகையிரத சாரதிகளின் திடீர் சுகயீன விடுமுறையால் பல புகையிரத சேவைகள் இரத்து

67 0

புகையிரத சாரதிகளின்  திடீர் சுகயீன விடுமுறை காரணமாக திங்கட்கிழமை (26) பிரதான அலுவலக புகையிரத சேவைகள் பல இரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டதோடு, சேவையில் ஈடுபட்டிருந்த புகையிரதங்களும் குறிப்பிட்ட சில புகையிரத நிலையங்களில் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

காலை 6.22க்கு பொல்கஹாவலையிலிருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரதம், 6.25க்கு பொல்கஹாவலையிலிருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரதம், அதிகாலை 3.55க்கு கனேவத்தையிலிருந்து பாணந்துரை செல்லும் புகையிரதம், அதிகாலை 5.20க்கு பொல்கஹாவலையிலிருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரதம் மற்றும் அதிகாலை 4.40 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை செல்லும் புகையிரதம் என்பவை இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை.

இது தொடர்பில் புகையிரத திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவிக்கையில்,

புகையிரத சாரதிகள் பலர் ஒரே சந்தர்ப்பத்தில் விடுமுறை எடுத்துள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் விடுமுறையை கோரினால் எம்மால் அதற்கு அனுமதி வழங்க முடியாது. காரணம் ஏற்கனவே புகையிரத சாரதிகள் சேவையில் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே விடுமுறை மறுக்கப்பட்ட காரணத்தால் அவர்கள் தாம் சுகயீன விடுமுறையிலிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே பல புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டன. தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தாம் எவ்வாறான தொழிலில் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். எனவே புகையிரத சேவையாளர்கள் இது குறித்த புரிதலுடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் பயணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.